
ஒரு இனவழிப்பை மறுப்பதும் இனவழிப்பின் ஒரு அம்சமாகும்(1). தாயகத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற தமிழினவழிப்பின் விளைவுகளுக்கு எதிராக போராட்ட்ங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப் போராட்டங்களைத் திசை திருப்பி, தமிழினவழிப்பை மறுத்து, ஈழத் தமிழர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான நல்லிணக்க நடவடிக்கைகளை சில அமைப்புகள் மேற்கொள்கின்றன. இவ்வமைப்புகளில் ஒன்றை ஒரு உதாரணமாக எடுத்து, எவ்வாறு தமிழினவழிப்பின் மறுப்பு நடைபெறுகிறது என்பதையும் மற்றும் இந்நடவடிக்கைகளுக்கு எவ்வாறு தமிழர்களே துணைபோகின்றனர் என்பதைப் பார்க்கவுள்ளோம்.
GFBV
GFBV (Gesellschaft für bedrohte Völker) எனும் அமைப்பு 1970ல் உருவாக்கப்பட்டது. ஜேர்மன், ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இவ்வமைப்பின் கிளைகள் உள்ளன. இவ்வமைப்பின் சுவிஸ் கிளை 1989ல் உருவாக்கப்பட்டது. பழங்குடியினருக்கும் மற்றும் சிறுபான்மையினருக்கும் ஆதரவான போராட்டங்களை நடாத்துவதும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் உரிமை மட்டுப்படுத்தல்களுக்கும் மற்றும் நீதி மறுப்புகளுக்கும் எதிரான போராட்டங்களை நடாத்துவதும் GFBVயின் சுவிஸ் கிளையின் தற்போதய வேலைத்திட்டங்கள் ஆகும்(2).
இவ்வமைப்பின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் 02.04.2017 அன்று யாழ் நல்லூரில் நில அபகரிப்பு தொடர்பான ஒரு பட்டறை நடைபெற்றது. இப்பட்டறையில் இலங்கைத்தீவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கு கொண்டனர். தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்புகளையும் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகளையும் சமப்படுத்த முடியாது. ஆனால் இச்சமப்படுத்தலை இவ்வமைப்பினூடாக அப்பட்டறையின் கருப்பொருளாக்கி தமிழின அழிப்பின் பின்னணியை மறுத்து ஒரு நல்லிணக்கத்தை மேற்கொண்டுள்ளது GFBV அமைப்பு(3)(4)(5).
அத்துடன் கடந்த 30.08.2017ம் திகதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற்றன. சுவிஸ் நாட்டின் தலைநகரான „பேர்ண்“ நகரிலும் இவ்வமைப்பின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்வு நடைபெற்றது(6). இந்த நிகழ்விற்குத் தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகளும் அனுசரணை வழங்கினர்(7).
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரையும் மற்றும் இலங்கை அரசை விமர்சித்தவர்கள் காணாமல் போனதையும் சமமப்படுத்திக்கிறது GFBV அமைப்பு(8). அவ்வமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர் ஒருவர் தெரிவிக்கையில், „தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புக்களே சிறீசேனாவிடம் நீதிகேட்டு கோஷங்களை எழுப்பிய அதேவேளை தேசியக் கொடிகளைப் பிடிப்பதற்கும் தடை விதித்திருந்தனர்.“ என்றார்.
தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைப்பதற்காக இந்நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தமிழ்த் தேசியவாதத்தின் பிரதிநிதிகள் அல்லது தமிழ்த் தேசியவாதச் சிந்தனையை அடுத்த தலைமுறைக்குக் கொடுக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் அல்லது அதன் சந்தேகத்தின் பெயரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். மகாவம்சச் சித்தாந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வினவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை மறுப்பது தமிழினவழிப்பின் ஒரு அம்சமாகும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்குவது தமிழினவழிப்பை மறுப்பதற்குச் சமமாகக் கருதப்படும். இதனைத் தமிழ்த்தேசியம் பேசும் அமைப்புக்கள் செய்தாலும் கூட அது ஒரு குற்றமாகவே கருதப்படும்.
(1) – http://www.genocidewatch.org/aboutge…/8stagesofgenocide.html
(2) – https://www.gfbv.ch/de/ueber-uns/wer-wir-sind/
(3) – https://www.gfbv.ch/…/kampag…/tourismus-und-militarisierung/
(4) – http://www.tamilwin.com/development/01/141610
(5) – https://www.youtube.com/watch?v=HagkSEoFgts
(6) – https://www.youtube.com/watch?time_continue=7&v=-guf756JXdY
(7) – https://www.facebook.com/SwissSTCC/posts/1671481996195988
(8) – https://www.gfbv.ch/de/verschwundene/#situation
Schreib einen Kommentar