
கடந்த வாரம் வியாழன் அன்று உலகத்தின் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. 8வது முறையாக அனுஷ்டிக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் பங்குகொண்ட தமிழர்கள், தங்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பான கருத்தியலின் காரணமாக பிளவுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தமிழர்களின் எதிர்த்தரப்பினர் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாத்து, அதனை நிறுவும் வேலைத்திட்டங்களை மிக நுட்பமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை தமிழர்களாகிய நாங்கள் புரிந்து கொள்ளத் தவறினால், எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
முள்ளிவாய்க்கால் தமிழர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட இடம் மட்டுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் நிறுவப்பட்ட மற்றும் நிர்வாகமயப்படுத்தப்பட்ட தமிழிறைமை அழிக்கப்பட்ட இடமாகும். இந்நடவடிக்கையானது “Project Beacon” என்னும் பெயரைக் கொண்டது. 2005 ஆண்டு இறுதியில் “Oslo” நகரில் இணைத்தலைமை நாடுகளுக்கு இத்திட்டம் சமர்பிக்கப்பட்டு, அவர்களின் ஆதரவினையும் மற்றும் அந்நடவடிக்கையினை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் உதவிகளையும் பெறப்பட்டு நிகழ்த்தப்பட்டது. இந்நடவடிக்கையின் திட்டமிடலின் படி மே மாதம் 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர்.(1)
2008ம் ஆண்டில் யோகரட்ணம் யோகி அவர்கள் இந்நடவடிக்கை தொடர்பாக பேசிய காணொளி ஒன்று உள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்.(2) விடுதலைப் புலிகளுக்கு எதிராக பின்னப்பட்ட இப் பாரிய திட்டத்திலிருந்து தப்புவதற்கு, தமிழிறைமை என்னும் தங்களின் கொள்கையிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். தங்களின் அழிவை ஏற்றுக்கொண்டு, இறுதிவரை தமிழிறைமையை விட்டுக்கொடுக்காமல் போராடியது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கு கொள்கைப்பற்று தொடர்பான ஒரு அழகிய எடுத்துக்காட்டாக அமைகிறது.
தமிழிறைமையை விட்டுக்கொடுக்காமல் இருந்ததன் காரணமாக, இன்றுவரை இக்கொள்கை நிலைத்து நிற்கிறது. இலங்கையின் ஒற்றையாட்சி வடிவத்தில் இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியல் நலன்கள் தங்கியிருப்பதால், இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எதிரான தமிழிறைமை இந்நலன்களைப் பாதிக்கும் விதமாக அமைகிறது. இதனாலேயே இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். அவர்கள் அழிந்த பின்னரும் தமிழரின் மனங்களில் அவர்கள் நிலைத்து நிற்பதால், அதனூடாக தமிழிறைமை என்னும் கொள்கையும் அவர்களின் மனங்களில் நிலைத்து நிற்கிறது. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஒரு அவசியமான விடயமாக அமைகிறது. ஏனெனில் அதனூடாக அவர்கள் பின்பற்றிய கொள்கையும் ஒரு பயங்கரவாதத்தின் கொள்கையாக மாற்றிவிடமுடியும்.
பயங்கரவாத முத்திரை குத்தும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் சில நடவடிக்கைகளை கீழே தருகிறோம்.
– சுவிஸ் நாட்டில் சேகரிக்கப்பட்ட நிதி, பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு எனும் குற்றச்சாட்டைச் சுமத்தும் வழக்கு.(3)
– அமெரிக்காவின் இரட்டை கோபுர வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் விடுதலைப்புலிகள் என தெரிவிக்கும் தமிழ்ச் செய்தி. (4)
– இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு குமரன் பத்மநாதன் (KP) அளித்த பேட்டி. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ISIS அமைப்பையும் சமப்படுத்தி பேசியுள்ளார்.(5)
– “Cannes” ல் திரையிடப்படயிருக்கும் திரைப்படமான “Demons in Paradise”. இதில் தமிழர்களின் போராட்டம் தன்னை அழிக்கும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.(6)
அத்தோடு இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மக்களுக்கு மட்டும் தான் அஞ்சலி செலுத்த வேண்டும், உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவு கூறக்கூடாது என்ற கருத்தியல் ஆழமாக வேரூன்றி நிறுவப்பட்டுள்ளது.(7) இது முதற்பார்வையில் தமிழர்களையும் மற்றும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கும் செயலாக தென்பட்டாலும், இந்த விடயத்தை ஆழமாக பார்க்கும் போது, தமிழர்கள் இறந்ததற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் மற்றும் இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றனர்.
இந்நடவடிக்கைகளை தமிழர்களாகிய நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதிலேயே எமது அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது. இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான எமது அரசியல் செயற்பாடுகள், இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாக்க விரும்பும் தரப்பினரிடமும் மற்றும் அவர்கள் ஆளுமை செலுத்தும் அமைப்புகளிடமும் பிச்சைப் பாத்திரங்களை ஏந்தி நின்றமையே ஆகும்.
காலனித்துவவாதம் அகழ்ந்து விட்டதாக பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் காலனித்துவவாதம் உருவாக்கிய அரசியல் யாப்புகளும், அரச வடிவங்களும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளும் இன்னும் அமுலில் உள்ளன. இவையூடாக இன்னும் ஆக்கிரமிப்புகளும் மற்றும் சுரண்டல்களும் உலகலாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் தமிழீழமும் விதிவிளக்கல்ல. ஆனால் 2009ம் ஆண்டு வரை தமிழீழம், ஆளுமை செலுத்தும் வல்லரச நாடுகளிடமோ அல்லது இந்நாடுகள் ஆளுமை செலுத்தும் அமைப்புகளிடமோ தங்களின் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இன்று தமிழினம் இதற்கு மாறாக அழித்தவர்களிடம் நீதியையும் மற்றும் உரிமைகளையும் எதிர்பார்த்து ஏமாந்து போய்க்கொண்டிருக்கின்றது.
(1) http://www.tamilcanadian.com/page.php?cat=5&id=5238
(2) https://www.youtube.com/watch?v=navzDlp-iC8
(3) https://www.srf.ch/…/monsterprozess-schweizer-tamil-tigers-…
(4) http://www.velichaveedu.com/mm071-png/
(5) https://www.youtube.com/watch?v=fng_pZ9j9kw
(6) http://www.festival-cannes.com/…/f…/films/demons-in-paradise
(7) http://tamilnet.com/art.html?catid=79&artid=38678
Schreib einen Kommentar