
அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 15.09.2019 அன்று சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 32வது ஆண்டு நினைவுநிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தியாகி லெப். கேணல் திலீபன் நினைவாகக் கலை நிகழ்வுகளும் அரசியற் கருத்தரங்கமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மேற்படி நினைவுநிகழ்வானது மூன்றாவது தடவையாக நடாத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 14.50 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்
அடுத்ததாகத் தேசியக்கொடியேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரேற்றல், மலர்மாலை அணிவித்தலுடன், தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களுக்கான ஈகச்சுடரேற்றல் மற்றும் மலர்மாலை அணிவித்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், தொடர்ந்து நடைபெற்ற அகவணக்கத்தின்போது கீழே குறிப்பிடப்பட்ட வரிகளுடனான அறிவிப்பு வழங்கப்பட்டது.
„தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் இலங்கை இந்தியப் படைகளாலும், இரண்டகர்களாலும், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் துணையுடன் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுபற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக…. „







அரங்க நிகழ்வில் முதல் நிகழ்வாக தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த பல்லியத்துடனான பாடல்கள் இசைக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக 1987ம் ஆண்டு லெப் கேணல் திலீபன் அவர்கள் யாழ் கோட்டையின் முன்பாக ஆற்றிய வரலாற்றில் நிலைத்த உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இளம் பாடகி ஒருவரினால் „பாடும் பறவைகள்“ பாடல் பாடப்பெற்றது.



சிறப்புரையினை Tamilnet ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு ஜெயா அவர்கள் நிகழ்த்தினார். இதன்போது, லெப். கேணல் திலீபன் அவர்களின் வரலாற்றுக்குறிப்புகளுடன் தொடங்கி, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பைத் தெளிவாக விளக்கினார். குறிப்பாக பூகோள அரசியலின் நலன்களுக்காகத் தமிழர்களின் மரபுரிமையினைச் சிதைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் தமிழினவழிப்பின் ஒரு வடிவமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தி தொடர்பான முதலீடுகள் ஆகும் என்பதனைத் தெளிவாக விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



சிறப்புரையைத் தொடர்ந்து சிறிய இடைவேளையின் பின் „யாகத்தீயில் தேகம் ஊற்றி“ எனும் பாடல் இசைக்கப்பட்டதுடன், அக்கினிப்பறவைகள் அமைப்பின் சார்பாக முடிவுரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது லெப். கேணல் திலீபன் அவர்களின் வரலாறு அக்கினிப் பறவைகள் அமைப்பினை எவ்வாறு செதுக்கியது என்பது தெளிவாக்கப்பட்டது. அத்தோடு, தற்போதைய காலகட்டத்தில் நிலவும் சிக்கல்களையும் மற்றும் எமக்கு அமைந்துள்ள வாய்ப்புக்களையும் விளக்கி, தங்கள் வரலாற்றுக்கடமையினைத் தொடர்வோம் என்பதையும் அவர்கள் உறுதியுடன் மொழிந்ததோடு, நிகழ்வு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Schreib einen Kommentar