நகர்த்திச் செல்லும் தலைவனே எழுதிச் செல்லும் வரலாறு – க.வே பாலகுமாரன்

எந்தவொரு விடுதலைப் போராடத்திலும் காணமுடியாத பல்வேறுபட்ட விசேடமான குணவியல்புகளைக் கொண்டது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இப்போது மேலும் உறுதியாக்கப்பட்டுவிட்டது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட „எனது மக்களின் விடுதலைக்காக“ என்கின்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனைத் தொகுப்பு பற்றியே இங்கு குறிப்பிடுகிறோம்.

300 பக்கங்கட்கு மேல் கொண்ட இந்நூல் அறிக்கை வடிவமாக, நேர்காணல் வடிவமாக, கடித வடிவமாக, மேடைப்பேச்சு வடிவமாக எனப்பலதரப்பட்ட வடிவில் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் ஒரு அதிமுக்கியமான வரலாற்று காலகட்டத்தில் காலப்பொருத்தமாக தமிழினம் ஒரு கணம் நிதானித்து முன்னைய வரலாறுகளை மீள் நினைவூட்டி முனைப்புடன் முன்செல்லவேண்டிய சூழ்நிலையில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல மலைவிழுங்கி மகாதேவன் போல வரலாற்றுண்மைகளை விழுங்கி பேரினவாதப் பொய்களைக் கூச்சலாக வெளிப்படுத்தும் இன்றைய சிங்களத் தலைமைக்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் வரலாற்றுண்மைகளை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. „ஜே.ஆர். ஒரு உண்மையான பௌத்தராக இருந்திருப்பின் நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது“ என்கிற தலைவரின் காத்திரமான பதில் (1984 மார்ச் சண்டே இதழில் வெளியான பேட்டி) இதற்கு தக்க சான்றாகும்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது என்னவென்றால் போராட்டம் நிகழ்த்தப்படும் போதே அது வழிநடத்தப்படும் முதன்மை நபராலே அது வரலாற்றாக்கப்படும் விதம்தான்; இது வேறு எங்கும் காணமுடியாதது. ஏனென்றால், தலைவரின் சிந்தனை வடிவங்களே செயல்வடிவமாகி அச்செயல் வடிவமே தலைவர் வாயிலாக சொல்வடிவம் பெறுவதால், இந்நாடு பெறுமதியான வரலாற்று ஆவணம் உருவாகிவிட்டது. இங்கே இன்னொரு விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டும். ஏனென்றால் பொதுவாக தமிழ்நாட்டில் என்றாலென்ன, குறிப்பாக தமிழீழத்தில் என்றாலென்ன, தனது வரலாற்றையே செப்பமாக காலத்தொகுப்பாக குறித்துவைக்கும் பழக்கமின்மை தமிழனின் பெருத்த குறைபாடாக அறிவாளரால் சொல்லப்பட்டுள்ளது. இங்கே இப்போது அக்குறைபாடு  இல்லாமல் போகிறது. இனிவரும் சந்ததி இப்போதுள்ள சந்ததி மேல் குறைசொல்ல வழியில்லாமல்  போகின்றது.

„வரலாறு எனது வழிகாட்டி“ எனத்தொடங்கி „சத்தியத்தின் அடிப்படையில் சமூகநீதி மலரவேண்டும்“ என தர்க்கரீதியாக முடிந்தும், இத்தொகுப்புநூல் 1984ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி உள்ளடக்கும் முக்கிய நிகழ்வுகளை விளக்கி நிற்கிறது. அத்தோடன்றி அக்காலகட்டத்தில் உடனடியாக வெளியிடமுடியாதிருந்த பல உண்மைத் தகவல்களை, முக்கிய அரசியல் மடல்களை தமிழ் மக்கள்முன் வெளிப்படையாக வைக்கின்றது.

குறிப்பாக எம்மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் பற்றி எம்.ஜி.ஆர் அவர்கட்கு தலைவர் எழுதிய 11.10.1987 ஆம் திகதிய மடல், அதுபோல முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதப்பட்ட பல மடல்கள், ஐ.நா. செயலாளருக்கு, அணிசேரா அமைப்பிற்கு இந்தியப் படையின் கொடூரம் குறித்து, போரை நிறுத்தவேண்டிய அவசியம் குறித்து எழுதப்பட்ட இராஜதந்திர வகையிலான மடல்கள் முக்கியமானவை. இவையெல்லாம் இன்று வெறும் மடல்கள் அல்ல. தமிழீழ மக்கள் தமது விடுதலையை வென்றெடுக்க வேண்டியதற்காக தார்மீக நியாயங்களை நிறுவியவையாக, விடுதலைப்போர் எவ்வாறு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என்பதற்காண ஆணித்தரமான சான்றுகளை முன்வைப்பாவையாகிவிட்டான. அவ்வகையில் 1980 இன் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் எவ்விதம் படிப்படியாக தமிழீழ மக்களின் விடுதலைக்கான போராட்டமாக, பங்காகப் பரிணமித்தது பற்றி அறியமுடியும். 

இத்தொகுப்பு நூலின் தனித்த சிறப்பியல்பு தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் படிமுறை வளர்ச்சியை, தாக்கம் முதலிலேயே எடுக்கப்பட்ட முடிவுகளின் இன்றைய பொருத்தத்தை, எதிர்காலத்தை முற்கூட்டியே பிசகின்றி கணிக்கும் ஆற்றலை, அணுகுமுறைகளை அறிய வழிவகுப்பதேயாகும். இதேபோன்று பல உண்மைகள் இந்நூலுக்குள் விரவிக்கிடக்கின்றன. இந்நூலை 1987க்கு முன்னான காலப்பகுதி, 87-90க்கும் இடைப்பட்ட பகுதி, 90க்கும் பிற்பட்ட பகுதியென மூன்றாக வகுக்க முடிகிறது.

முதற்பகுதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காரணங்களை அதன் நியாயத்தை இல்டசியத்திற்கு பாதகமேற்படாமல் இந்திய உறவினை அதன் தலையீட்டை கையாள முயன்றமை பற்றி பல செய்திகள் உள்ளன. இரண்டாவது காலகட்டத்தில் இங்குவந்து இந்தியப்படை வழிதவறி, சிங்களச் சதிக்கு இரையானது பற்றி, அப்போரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. ஆனால் இவற்றிலெல்லாம் முக்கியமானதாக, மூன்றாம் காலகட்டபகுதி அமைகின்றது. முன்னிரு கட்டங்களை விட வேறுபட்டதாக தலைவரின் தன்னுணர்வுகளை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரரு பெரு போரை நடாத்தும். அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை அறிய முடிகின்றது.

இவை எல்லாவற்றையும் விட மிகமுக்கியமானது, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும், இந்நூல் அளிப்பது தான். அவ்வகையில் இது ஒரு ஆய்வுக்குரிய அதிசய நூலாக அமையப்போகிறது. ஏனெனில் தலைவரின் தனித்த இயல்பான, இயற்கையின் இயல்பினை வரலாற்று விதிகளை அறிந்து அவ்விதிகளையே நெறிப்படுத்தி அதேசமயம் புதிய வரலாறு படைக்கும் அவரின் உள்ளுணர்வே இங்கு முக்கியம் அல்லவா! இந்நூலுக்குள் அதற்கான சான்றுகள் பரந்துகிடக்கின்றன. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் சண்டே இதழில் வெளிவந்த செவ்வியில் „இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தாத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி“ என்பது தலைவர் எந்த முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தத்துவ வரம்பிற்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாமையை புலப்படுத்தும்.

அதேபோல், „கெரில்லா போர் முறையை சிலர் இப்போது கண்டித்து விமர்சனம் செய்கின்றனர். நாம் கெரில்லா போராட்டத்தை மக்கள் மத்தியில் படிப்படியாக நிலைநிறுத்தி மக்களின் பங்களிப்போடு விரிவுபடுத்தி வெகுசனயுத்தமாக்கும் கொள்கை திட்டத்தையே பின்பற்றுகிறோம்“ என்பதும் „போர்க்களத்தில் குதியுங்கள்; எமது பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்; களத்திலே எதிரியை சந்திக்கும் போதே ஒற்றுமை, நல்லெண்ணம் பிறக்கும்“ என 1984ஆம் மே மாதம் வெளியிடப்பட்ட தலைவரின் அறிக்கை இரு பெரும் வினாக்கட்கு விடையை அன்றே கூறி இன்று அது நிதர்சன உண்மையானதை காட்டுகிறது. „என்னைத் திருப்திப் படுத்துவது இலேசான காரியமல்ல; இன்னும் சிறப்பாக செய்ய முடியும்“ என யூனியர் விகடனக்கான 86 மே மாத செவ்வியில் செய்வன திருந்தச் செய்யும் தனது இயல்பை வெளிக்காட்டியமை அதேபோல 86ஆம் ஆண்டு நியூஸ் வீக் செவ்வியில் „நான் தனிப்பட்ட முறையில் சொந்த முயற்சியில் பயிற்சி பெற்றேன். நான் எனது இயல்பான திறனாற்றல் மூலமே செயற்படுகிறேன்“ என்றமை, அதே செவ்வியில் இந்திய இராணுவத் தலையீடு அனாவசியம் என திட்டவட்டமாகக் கூறியமை, இங்கு குறிப்பிட்டுக் காட்டவேண்டியமை.

அதுபோலவே புகழ்பெற்ற 1987 யூலை சுதுமலைப் பேச்சின் பொது „சிங்கள இனவாதப் பூதம் இல. இந்திய ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை“ என்றமையில் எங்கும் எல்லாச் செவ்விகளிலும் அறிக்கைகளிலும் அடிநாதமாக, தமிழீழ இல்டசியத்தை மேன்மைப்படுத்தும் இயல்பினைக் காணமுடியும். இவற்றினை எல்லாம் விட 1986 செப்டெம்பர் மாத இந்து செய்தித்தாளில் வெளிவந்து மிக்க பரபரப்பை ஊட்டிய தலைவரது பேட்டியின் இறுதியில் „என் இயல்பான போக்கையும் சொல்கிறேன்-உண்மையான அரசியலில் நான் எப்போதும் பேச்சுக்கு தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்த பின்பு தான் நாம் பேசத் தொடங்குதல் வேண்டும்… சொல்லுக்கு முன்பே எப்போதும் செயல் இருக்க வேண்டும். இச்செயல்தான் எம்மையும் மக்களையும் இறுகப் பிணைந்தது. இராணுவம் உங்களை தாக்க வருகிறது நாங்கள் எதிர்த்துத் தாக்குவோம். உங்களைப் பாதுகாப்போம் என்று நாம் சொன்னால்-சொன்னதை செயல்படுத்தும் போதுதான் மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்கிறார்கள். இதனால்தான் நாம் இராணுவ நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தட்டுகிறோம்.“ இப்பெட்டியில் இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் „தலைவரின் முன் நாம் தொற்றுப் போனோம்-அவர்பால் ஈர்க்கப்பட்டுவிட்டொம்.“ எனப் பின்னால் கூற நேரிட்டது.

எனவே இவ்வாறாக வாசிப்போர் மனதிலே பலதரப்பட்ட உணர்வுகளை தோற்றுவிக்கக்கூடிய இத்தொகுப்பு நூல் உண்மையிலேயே அதிசயமானதாகும். ஏனென்றால் இரத்தமும் சதையும் நிரம்பிய உயிர்ப்போராட்டம் அல்லவா இவை?

2 Kommentare

  1. நல்ல அருமையான முயற்சி வரவேற்கின்றோம். கோபால் ரொறன்ரோ கனடா.06/08/2019

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*