சுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்

08.01.18 அன்று, சுவிஸ் நாட்டில், „பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு“ எனும் குற்றச்சாட்டோடு 13 பேர் மீது ஒரு வழக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அக்குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்படுகிறது (1). சுவிஸ் நாட்டின் ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும் இவ்வழக்கு ஒரு பிரதான செய்தியாக அமைந்திருக்கின்றது. இருப்பினும், இவ்வழக்கு தொடர்பான ஆழமான புரிதல் தமிழ் மக்களிடம் உள்ளதா எனும் கேள்வி எழுகிறது. இவ்வழக்கை மெலோட்டமாகப் பார்க்காமல் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஊடகங்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் உள்ளனர். இதைத் தமிழர்கள் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கு அமைவாக செயற்படத்தவறினால், தமிழினம் மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு

20.07.16 அன்று சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனத்தின் இணையதளத்தில், 13 நபர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நபர்கள் மீது:

– ஒரு குற்றவியல் அமைப்பின் அங்கத்துவம்
– ஒரு குற்றவியல் அமைப்புக்கான உதவி
– நிதி மோசடி
– பத்திர மோசடி மற்றும்
– பண மோசடி,

போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்தோடு, விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய நிதி உதவியினால் யுத்தம் இன்னும் கொடூரமாகவும், நீண்ட காலமாகவும் நடைபெற்றது என்று அக்குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(1)(2) இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஒப்பானதொன்றாகவும், தமிழினவழிப்பை நியாயப்படுத்தும் ஒரு மோசமான விடயமாகவும் காணப்படுகிறது.

இவற்றுக்கும் அப்பால் இவ்வழக்கின் பிரதான கேள்வியாகப் பார்க்கப்படும் விடயம் என்னவெனில், „தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பா?“ என்பதாகும். சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனம், இதனை பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு எனக் கருதுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கிறது. இக் கேள்விக்கான பதிலை, அவ்வழக்கின் நீதிபதிகள் சட்ட வல்லுனர்களின் உதவியோடும் வரலாற்று வல்லுனர்களின் உதவியோடும் வழங்கவுள்ளனர் (2).

கிளர்ச்சி முறியடிப்புச் சூழலும் இவ்வழக்கும்

https://www.facebook.com/GlimpsesofTamilEelam/photos/a.135068343870642.1073741839.132869714090505/135068947203915/?type=3&theater
https://www.facebook.com/GlimpsesofTamilEelam/photos/a.135068343870642.1073741839.132869714090505/135068947203915/?type=3&theater

COIN (Counter-insurgency) என்றழைக்கப்படும் கிளர்ச்சி முறியடிப்புத் திட்டம், வெறும் இராணுவ விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையல்ல. ஏனெனில், கிளர்ச்சி முறியடிப்பு என்பது ஆயுதம் தரித்த கிளர்ச்சியாளர்களைக் கொல்வது மட்டுமின்றி, அக்கிளர்ச்சியூடாக உருவான அரசியல் வெற்றிடத்தை அழித்தலே ஆகும் (3).

அதன் அடிப்படையிலேயே 2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேர்த்து, அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசும் அழிக்கப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசின், „அரசியல், நிர்வாக மற்றும் ஆயுத ஏகபோகங்களை“ முறியடித்து, தமிழீழ நடைமுறை அரசு நிறுவப்பட்டது.

2009ம் ஆண்டு இலங்கைத் தீவிலிருந்த தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, தமிழரின் தாயகத்தில் இலங்கை அரசின் ஏகபோகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால், 2009ம் ஆண்டின் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நிலவுகின்ற தாயகக் கோட்பட்டை அழிக்க முடியவில்லை. அதனால் தான், புலம்பெயர்ந்த தமிழர்களின் மீதும் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ் வேலைத்திட்டங்களுக்குள் இவ்வழக்கும் அடங்குகின்றது.

சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

24.12.00 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். மூன்று தடவைகள் இதன் கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் இதற்கு ஓர் தகுந்த பதிலை அளிக்கவில்லை. கட்டுநாயக்க மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னரே, இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்குத் தகுந்த பதிலை அளித்தது (4). தமிழர் தரப்பின் முயற்சியாலேயே, யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து, அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

„இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவிப்பது ஒரு பிழையான முடிவு. ஏனெனில், சமாதான நடவடிக்கைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதால், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவித்தல் ஒருதலைப் பட்சமானதாக அமைந்துவிடும்,“ என்று 2005ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும்  வழக்கறிஞர் சம்மேளனம் தெரிவித்திருந்தது (5).

ஆனால், Washington நகரில் நடைபெற்ற மகாநாட்டில் தமிழர்களைப் புறக்கணித்து (6), சுனாமி கட்டுமானத்தை நிலைகுலைய வைத்து (7), ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையினைக் கொண்டுவந்து (8), இப் பேச்சுவார்த்தை முறிவுபெற்றது. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்திய, அமெரிக்க வல்லாதிக்கங்கள் இருந்தன. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததுடன், 2008ம் ஆண்டு இலங்கை போர்நிறுத்தத்திலிருந்து விலகியது. இதன் பின்னரே, 2009ம் ஆண்டில் யுத்தம் உக்கிரமடைந்து முடிவுபெற்றது.

பேச்சுவார்த்தையை வெளிப்படையாகச் சக்திகள் தடுத்த போதும், திட்டமிட்ட வகையில் தமிழர்கள் அழிக்கப்பட்ட போதும், சுவிஸ் மௌனம் காத்தது. ஆனால் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் புரிந்தனர் என்றும், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் யுத்தம் இன்னும் கொடூரமாக நடைபெற்றது என்றும், வழக்கறிஞர் சம்மேளனம் குறிப்பிடுகிறது (1)(2). மறு புறத்தில், இலங்கையுடன் இடப்பெயர்வு தொடர்பான உடன்படிக்கையைச் செய்து, தமிழர்களின் அடையாளத்தை மறுக்கிறது (9).

http://www.puradsimedia.com/?p=53
http://www.puradsimedia.com/?p=53

அத்தோடு, 2011ம் ஆண்டு இவ்வழக்குத் தொடர்பாக கைதுகளை மேற்கொண்ட பொழுது, வழக்கறிஞர் சம்மேளனத்தின் இணையத்தளத்தில், „சட்டத்துக்குப் புறம்பான நிதிசேகரிப்பு“ எனும் வார்த்தைப்பிரயோகம் பிரயோகிக்கப்பட்டது (10). ஆனால் 2016ம் ஆண்டு, அதே இணையத்தளத்தில் „பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு“ எனும் வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டது (1).

இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவெனில், 2005ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் வழக்கறிஞர் சம்மேளனத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள், இப்பொழுது இப் பதவியை வகிக்கவில்லை. இப்பொழுது இப்பதவியை வகிக்கும் நபர், IMF மற்றும் உலக வங்கியுடன் இணைந்து, அவர்களின் சில வேலைத்திட்டங்களில் சேர்ந்து செயற்பட்டவர் ஆவார் (11). எவ்வளவு பொதுமக்கள் இறப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்று IMF அமைப்பும், உலக வங்கியும் தெரிவித்திருந்தமை, „WIKILEAKS“ வெளியிட்ட „Hilary Clinton“னின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது (12).

https://wikileaks.org/clinton-emails/emailid/15943
https://wikileaks.org/clinton-emails/emailid/15943

தமிழர்களின் பணி

இவ்வழக்கு நடைபெறுகின்ற தருணத்தில், தமிழர்களின் எதிர்வினை பலமானதொன்றாகத் தெரியவில்லை. இத்தகைய எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமானதாக மட்டுமே அமைந்துவிடாமல், சட்ட ரீதியிலும் தாயகக் கோட்பாடு ரீதியிலும் பலமானதாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் சேகரித்த நிதி, தமிழீழ நடைமுறை அரசை இயங்க வைத்தது. இது தமிழீழ தேசத்தின் தற்காப்புக்காகவும், உட்கட்டுமான அபிவிருத்திக்காகவும், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்பட்ட நிதியாகும். இதனை நாம் எவ்வித தயக்கமுமின்றி, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான், „பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு“ எனும் குற்றச்சாட்டினை நாம் தத்துவ ரீதியாக உடைக்க முடியும்.

https://www.facebook.com/GlimpsesofTamilEelam/photos/a.138092256901584.1073741852.132869714090505/138092333568243/?type=3&theater
https://www.facebook.com/GlimpsesofTamilEelam/photos/a.138092256901584.1073741852.132869714090505/138092333568243/?type=3&theater

1977ம் ஆண்டு தமிழீழத்துக்கான ஜனநாயாக ஆணை தமிழர்களினால் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே, தமிழீழ நடைமுறை அரசு நிறுவப்பட்டு, நிர்வாகமயப்படுத்தப்பட்டது. தமிழர்களின் இவ்வரசவடிவம் தரைமட்டமாக்கப்பட்டாலும், அதனை நாம் எமது அடையாளமாக, வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

„நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்புக்கே நிதி வழங்கினோம்“ என்று கூறுவதன் மூலம், தமிழீழ நடைமுறை அரசை நாமே மழுங்கடுக்கின்றோம். இம்மனோநிலையை நாம் மாற்றி, தமிழீழத்தில் தமிழீழ நடைமுறை அரசு ஒன்று மிக காத்திரமான முறையில் நிறுவப்பட்டு இயங்கிவந்தது, என்பதை நாம் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். இதுவே, அடுத்த கட்ட வேலைத்திட்டங்களின் அடிப்படையாக அமைகின்றது.

நிதர்சன்
வெல்வது உறுதி

(1) https://www.bundesanwaltschaft.ch/mpc/de/home/medien/archiv-medienmitteilungen/news-seite.msg-id-62777.html

(2) https://www.tagesanzeiger.ch/schweiz/standard/Der-Monsterprozess/story/10079549

(3) Learning Politics from Sivaram; ப. 133

(4) http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/slmm_final_report.pdfப.23

(5) https://www.srf.ch/news/schweiz/monsterprozess-schweizer-tamil-tigers-auf-der-anklage-bank

(6) http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/slmm_final_report.pdfப.27

(7) http://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/peace_process_halts_genocide_en.pdfப. 14

(8) http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/600-tamil-tiger-defeat-would-have-been-impossible-without-our-friends-in-washington-mangala

(9) http://www.puradsimedia.com/?p=53

(10) https://www.bundesanwaltschaft.ch/mpc/de/home/medien/archiv-medienmitteilungen/news-seite.msg-id-37134.html

(11) https://www.parlament.ch/afs/data/d/bericht/2011/d_bericht_v_k536_0_20110213_0_20110824.htm

(12) https://wikileaks.org/clinton-emails/emailid/15943

2 Kommentare

  1. தங்களின் கருத்தியலை படித்திருந்தேன் – உண்மைக்காக உழைக்கும் தங்களின் முயற்சியை வாழ்த்துவதோடு திட்டமிடப்பட்டு சீராக நாம் எதிர் கொண்டால் உண்மையை நிலைநிறுத்தமுடியுமென நம்புகின்றேன்
    தொடர்ந்தும் அறிய ஆவலாக உள்ளேன்.
    நன்றியுடன்
    11.01.2018

    • உங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள் ஐயா.
      அக்கினிப் பறவைகள் அமைப்பின் வேலைத்திட்டங்களைப் கவனியுங்கள்.

      வெல்வது உறுதி

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*